Wednesday, December 11, 2013

பாரதிக்குப்பிறந்த நாள், பார், அதி புனித நாள்!!

1  சிந்தனை மலர் தொடுத்து செவிக்கினிய பாநூறு
    தந்தனை நீ இத்தரணிக்கு     -    உந்தனை
    எத்தனை கோடி யுகம்பல போனாலும்
    சித்தம் மறப்பது அரிது.

2 சாதி வெறியரின்று சான்றோர் போர்வையிலே
   நீதி தவறுவோர் நாடாள்வர்    -   போதிமர
   புத்தனே, நீயின்று புவியிலில்லை, நன்றேயாம்
   இத்தருணம் வாழ்வதிங்கு இழுக்கு .

3  மானுடம் பாடவந்த முணடாசுக்கவியரசே
   தேனுடன் கலந்துண்டோம் உன்பாட்டை - வானுயர்
   தமிழளித்தாய், தறிகெட்ட திருநாட்டைத்திருத்தவொரு
   அமிழ்து எமக்களிப்பாய் என்று ?

4  வீரம் உன் வேதம், வீண்பேச்சு பகையுனக்கு
   காரம் உன் கவிதைத்துளிகள்   -  பாரதியே
   இன்று எம்நாட்டின் எழில்வளத்தைச்சுரண்டுமிந்தப்
   பன்றிக்கூட்டத்தைத்துரத்த நீ வா!

5  காதலை உன்போலே கவிநயத்தில் தோய்த்தெடுத்து
   தோதாய்ப்பொழிந்தவர் யாருமிலர்   -  ஏதேதோ
   ட்விட்டரில் காதலாம்,  செல்போனில் முத்தமாம்
   க்விக்பிக்ஸ் உலகமடா இது.



6  நல்லதோர் வீணையொன்றைப்புழுதியில் எறிதல் கண்டு
   சொல்லொணாத்துயருற்றாய் சுடர்கவியே   --  எல்லாமே
   கனவாய்ப்போனதடா,    காரிருள் சூழ்ந்ததடா
   உனக்குக்குறையில்லை, உயிர்நீத்தாய் .

7  உன்னிறுதி ஊர்வலத்தில்  உடனிருந்தோர் ஓரிருவர்
   தன்னிகரில்லா பாரதிக்கிக்கதி  -  இந்நிலையில்
   ஈனப்பிறவிகள், எத்தர்கள் வால்பிடிக்கும்
   மானங்கெட்டவர் ஒரு கோடி.

8  திசம்பர் பதினொன்றில் திரள்வது சோகமே
   கசக்கும் உண்மையிது பாரதி   -   பசப்புறு
   வார்த்தைகள் சேர்த்து உன் பிறந்தநாளைப்பாடல்
   நேர்த்தியுறு நன்செயலன்று.
  
  

1 comment: