1 பண்ணைப்புரம் எனும் பாங்கான பசுமைசூழ் ஊரொன்றில்
மண்ணைத்தோண்ட ஒரு மாணிக்கம் முளைத்தது அறிவீரோ
விண்ணைத்தொட்டதோர் இசையரசன் எங்கள் இளையராஜா
பண்ணுக்கரசன் புது ராகம் படைக்குமெங்கள் ராகதேவன்.
2 தேவர் மகனின் மாசறு பொன்னிலும் அவன் இழையே
ஆவர் கடவுளே கேட்போரும், அவன் பொற்திருவாசகமே
சேவற் கொடியோன் முருகனின் அழகொத்த அவன் ராஜகீதம்
மூவரும் முககண்ணரும் நற்றமிழும் உருகுமே அவனிசைக்கே.
3 இசையால் வசமானோம் இப்பிறவி பேறு பெற்றோம் இக்கணமே
அசையாபபொருளும் அசைந்தாடும் ஆனந்தக்கூத்தாடும்
விசையால் வேகமுறும் விண்கலமாய் மனம் உயரப்பறக்கும்
கசையால் அடித்ததுபோல் மெய் சிலிர்க்கும் கலைஞனவன் சிம்பொனியால்.
4 சிம்பொனி கேட்டிருப்போம் சிலப்பல சமயங்கள், அவ்வொலியின்
தம்பொருள் புரியாமல் தலை மட்டும் ஆடிடும் தாளம் போடும.
செம்பொன் மாணிக்கம் வைரம் நற்பவழத்துடன் அவ்விசையில்
அன்பொன்றையும் குழைத்து அளித்திட்டான் எம்மிசை ஞானியடா!
5 ஞானியும் நாடுவர் பனிவிழும் நல் மலர்வனத்தை
தேனி போல் சுற்றுவர் செவ்வந்திப்பூவை அந்தி மழையில்
ஊனினை உருக்குமாம் ஜனனீ அம்மா வென்றழைக்குமாம்
வானிலே வண்ண விண்மீன் விளிக்கும் பொன் மாலைபொழுதை.
6 பொழுதும் அவன் பாடல் அதில் இரவென்ன பகலுமென்ன
அழுதும் சிரித்தும் பின் சிறிது ஆர்ப்பரித்தும் ஆட்டமிட்டும்
பழுதாய் போன நெஞ்சில் பால் வார்த்து மருந்திட்டவனை
எழுதும் பெருமை பெற்றேன், வாழ்க பண்ணைப்புரத்தானே!
அருமை, அருமை. இளயராஜாவின் இன்னிசைக்கு, மோகனின் மோகனதமிழ் பொன்னாடை.
ReplyDeletekalakitta - Mohan !
ReplyDeleteKK
Nice tribute to king of melodies
ReplyDelete